Offline
உலகச் சதுரங்கத் தரவரிசையில் இடம்பிடித்து மூன்று வயது இந்தியச் சிறுவன் சாதனை
News
Published on 11/05/2024

கோல்கத்தா:

அனைத்துலகச் சதுரங்கக் கூட்டமைப்பால் (FIDE) அங்கீகரிக்கப்பட்ட ஆக இளம் சதுரங்க விளையாட்டாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளான் இந்தியாவைச் சேர்ந்த அனிஷ் சர்க்கார் எனும் சிறுவன்.

அவனுக்கு வயது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 19 நாள்கள் மட்டுமே ஆகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?.

முதலாவதாக ‘அனைத்து வங்காள விரைவுத் தரப்புள்ளிப் பொது விருது 2024’ போட்டியில் கலந்துகொண்ட அனிஷ், 11 போட்டிகளில் ஐந்து புள்ளிகளைப் பெற்று வியக்க வைத்தான்.

அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவின் முதன்மையான சதுரங்க விளையாட்டளரும் உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளவருமான கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் இரிகைசியுடன் விளையாடும் வாய்ப்பை அவன் பெற்றான்.

அதன்பின், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஒன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்ட அனிஷ், எட்டுக்கு 5.5 புள்ளிகளைப் பெற்றான். மொத்தம் 140 பேர் கலந்துகொண்ட அப்போட்டியில் அனிஷ் 24ஆவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றில், அனைத்துலகச் சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசையில் இடம்பெற்றுள்ள இருவரைத் தோற்கடித்தது, அவனது வயதில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

ஃபிடே தரவரிசையில் இடம்பெறும் நோக்கத்தில், தொடர்ந்து பல போட்டிகளில் அனிஷ் கலந்துகொண்டான். அண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்த 13 வயதிற்குடப்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றதன்மூலம் ஃபிடே தரவரிசையில் அவன் இடம்பிடித்தான்.

இப்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனே அனிஷின் கதாநாயகன் என்கிறார் அவனுடைய தாயார்.

 

 

 

 

 

Comments