சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச்370 விமானம் இதுவரை என்ன ஆனது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் நவீன தொழில்நுப்டம் பதிலளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த எம்எச் 370 விமானம் சில மணி நேரங்களில் ராடார் திரையில் இருந்து மாயமனது. விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்துடன் அந்த விமானத்தின் அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
என்ன ஆனது
மர்மமான முறையில் காணாமல் போன அந்த விமானத்தை தேடும்பணி மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் அந்த விமானம் எங்கே சென்றது… என்னவானது… அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கேள்விகளுக்கும் இன்று வரை விடையும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்களும் விமான பொறியியல் நிபுணர்களும், வான் போக்குவரத்து வல்லுநர்களும் ஒன்று திரண்டு தேடியும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
விமான பாகங்கள்
ஆப்பிரிக்க கடல் கரையிலும் இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தவிர கறுப்புப்பெட்டி உள்ளிட்ட விமானத்தின் வேறு பகுதிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா, மலேசியா, ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் தேடுதல் முயற்சிகளுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனிடையே வீக் சிக்னல் புரோபகேசன் ரிப்போர்ட்டர் எனும் அழைக்கப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த விமானம் தொடர்பில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் மாயமானதற்கு வேற்றுக்கிரக மனிதர்கள் காரணமாக இருக்கக்கூடும் என சில சமூக வலைத்தள வாசிகள் கூறியிருப்பதை இஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.
இது வெறும் கட்டுக்கதை என்று அவர்கள் கருதுகின்றனர். இஸ்பேஸ் நிறுவனத்தின் 6,000 செயற்கை கோள்கள் விண்வெளியில் சுற்றி வருவதாகவும் ஒரு முறை கூட ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பிரச்சினை வந்தது கிடையாது என அவர் கூறினார். ஆயினும் விண்வெளியில் இருக்கும் கரும்துளைக்குள் சென்று விமானம் மறைந்திருக்கலாம் என்றும் வேற்றுக்கிரக வாசிகளால் அது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வலம் வருகின்றன.