பிரதமரின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு அக்டோபர் மாத நிலவரப்படி RM13.7 மில்லியன் செலவு – நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர்: நவம்பர் 2022 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 22 நாடுகளுக்கு மேற்கொண்ட 39 உத்தியோகபூர்வ மற்றும் வேலைப் பயணங்களுக்கு 13.7 மில்லியன்ன் ரிங்கிட் செலவாகியுள்ளது. இந்த விஜயங்களில் சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனே தருஸ்ஸலாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் அடங்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சி பிரதேசங்கள்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.
இந்த நாடுகளைத் தவிர, அன்வார் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். பிரதமரின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் நிதி நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன என்று அவர் கூறினார்.
இந்த பயணங்களின் முதலீட்டு உறுதிப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பலன்களைக் கருத்தில் கொண்டு, செலவழித்த தொகை நியாயமானது என்று அவர் கூறினார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் பட்டியல், உடன் வந்த அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த செலவுகள் பற்றிய டத்தோ அவாங் ஹாஷிம் (பெரிக்காத்தான்-பெண்டாங்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதற்கிடையில், விமானச் செலவுகள் குறித்து டத்தோ அஸ்மான் நஸ்ருடின் (பெரிக்காத்தான்-படாங் செராய்) மற்றொரு கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஜாலிஹா, இவை அரசாங்க விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்குவதாகக் கூறினார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்குச் சென்ற அரசாங்க அதிகாரிகளின் செலவுகள் அந்தந்த அமைச்சகங்களின் பொறுப்பாகும் என்று அவர் அக்டோபர் 29 தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார். அதேபோல, பாதுகாப்பு அதிகாரிகளின் செலவினம் காவல்துறை மற்றும் ராணுவத்தின் வரம்புக்கு உட்பட்டது.
அன்வார் அனைத்துலக மாநாடுகளிலும் பங்கேற்றார். இது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த உதவியது மற்றும் புதிய முயற்சிகளுக்கான வாய்ப்புகளைத் திறந்தது. அனைத்துலக மாநாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ வருகைகள் மலேசியாவை சர்வதேச அரங்கில் மேம்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமைகளை வணிக சமூகத்திற்கு தெரிவிப்பதற்கும் நல்ல தளங்கள் என்று டாக்டர் ஜாலிஹா கூறினார். இந்த வருகைகள் மூலம், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் இடையே RM82.6 பில்லியனையும், கடந்த ஆண்டு முழுவதும் RM353.6 பில்லியனையும் மலேசியாவால் பெற முடிந்தது.