அமெரிக்காவை உலுக்கிய கோமாளி கில்லர்.. சிறையில் இருந்து விடுதலையான ஷீலா – பதறடிக்கும் பின்னணி!
கணவனின் முன்னாள் மனைவியைக் கோமாளி வேசம் போட்டு கொலை செய்த அமெரிக்கப் பெண்மணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த புளோரிடா கில்லர் கிளவுன் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கில்லர் கிளவுன் கொலை:மைக்கல் வாரன் என்பவரது மனைவி மார்லன் வாரன் என்ற பெண்மணியில் வீட்டின் காலிங் பெல்லை கிளவுன்[ கோமாளி] வேஷம் போட்ட ஒருவர் அழுத்தினார். கதவை திறந்த மார்லனிடம், கையில் வைத்திருந்த பலூன்களை அந்த கோமாளி கொடுத்தது. பலூங்களை வாங்கிக்கொண்டு How nice என்று மார்லன் சொல்லி முடிக்கும் முன்னர் அந்த கோமாளி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மார்லன் முகத்திலேயே சுட்டது. மார்லன் உயிரிழக்க கோமாளி வேடம் போட்டவர் அங்கிருந்து தப்பினார்.
ஷீலா:இந்த கொலை வழக்கில் எந்த விதமாக துப்பும் கிடைக்காமல் எப்.பி.ஐ. திணறி வந்தது. மைக்கல் வாரன் ஷீலா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி 2017 இல் எப்.பி.ஐக்கு கை கொடுத்தது. அதன்படி மைக்கல் வாரனின் இரண்டாவது மனைவி ஷீலா கீன் வாரன் தான் அந்த கொலையாளி என்ற முடிவுக்கு எப்.பி.ஐ.வந்தது.
மரண தண்டனை:ஷீலா கோமாளி துணி வாங்கியது, குறிப்பிட்ட அந்த பலூன்களை வாங்கியது என்று ஆதாரங்களைச் சேகரித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஷீலாவை எப்.பி.ஐ. கைது செய்தது. 7 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது, ஆனால் தனது குற்றத்தை ஷீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வந்து ஒப்புக்கொண்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் தற்போது நன்னடத்தை காரணமாக ஷீலா முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நவம்பர் 2 அன்று சிறையில் இருந்து 61 வயதான ஷீலா வெளியே வந்தார்.
குற்றம்:கொலைசெய்யப்பட்ட மார்லனின் கணவர் மைக்கல் ஒரு கார் டீலராக இருந்துள்ளார். ஷீலா இவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். மைக்கிலும் ஷீலாவும் காதல் உறவில் இருந்ததாக அவர்களது சகாக்கள் கூறுகின்றனர். மார்லன் கொல்லப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொண்ட மைக்கல் மற்றும் ஷீலா கைது செய்யப்படும்வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
அமெரிக்காவின் கில்லர் கிளவுன்:ஆனால் தற்போது மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காகவே ஷீலா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கொலை செய்யவில்லை என்றும் அவரது வக்கீல் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1970 களில் 33 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் ஜான் வெயின் கேசி. கிளவுன் வேடமைந்த இவர் அமெரிக்காவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார். அதே பாணியில் ஷீலா புளோரிடாவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார்.