ஜோகூர்:
கெமாஸ் -ஜோகூர்பாரு (Gemas-JB EDTP) ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள பாடங் பெசாரில் ஏற்கெனவே உள்ள ரயில் பாதையை படிப்படியாக விரிவுபடுத்த முன்னதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் கெமாஸ் வழியாக தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஜோகூரில் உள்ள சிகாமாட் மாவட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
குளுவாங், கூலாய் உள்ளிட்ட தெற்குக் கோடியில் உள்ள முக்கிய மாவட்டங்கள் நெடுகில் 11 புதிய ரயில் நிலையங்களில் செகாமட் முதலாவது ரயில் நிலையமாக உள்ளது.
கெமாஸ் முதல் சிகாமாட்வரையிலான 26 கிலோ மீட்டர் தொலைவிலான மின்சார ரயில் சேவை அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. முன்னதாக இந்தச் சேவை ஜூலையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய ரயில் சேவை இரண்டாவது முறையாக தாமதமாகியுள்ளது.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால், இது கெமாஸ்-ஜோகூர் பாரு இடையிலான முதல் பகுதியாக இருக்கும். இதன் மதிப்பு 9.5 பில்லியன் ரிங்கிட்டாகும். இந்த தாமதம், ரயில் பாதையில் மின் விநியோகப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதற்கிடையே இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர், ரயிலின் மின்சார விநியோகத்தை பரிசோதிக்கும் இறுதிக் கட்டத்தில் குழு ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அக்டோபர் காலக்கெடு தவறவிட்டதாகவும் கூறினார்.