Offline
உத்தர பிரதேசம்: 7 வயது சிறுவனின் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
Published on 11/16/2024 02:16
News

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 12-ந்தேதி யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக அந்த சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் கண்ணை சோதனை செய்த டாக்டர், அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Comments