சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானைப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, இந்தியத் திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ரகுமானின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர்களின் 29 ஆண்டுகால திருமண பந்தம் இந்த அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தம்பதியர்க்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதும் வெற்றுள்ளார்.
இந்நிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“இருவரது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்தத் தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது.
“வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தைக் கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய முடிவை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு திருமணம் தம்பதியர்க்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.