சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் பெயரில் நடந்த மோசடியில் பலர் பணத்தை இழந்துள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஏறக்குறைய 35 முறைகேடு சம்பவங்களில் 40,000 வெள்ளி ஏமாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது. நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மோசடியில் இழந்த மொத்த தொகை குறைந்தது 40,000 வெள்ளி இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான மோசடிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து அனுப்புவது போல மின் அஞ்சல் அனுப்பப்படுகின்றன. மாதத் தவணைகளில் அல்லது பணம் செலுத்துவதில் சிக்கல் இருப்பதால் உங்களுடைய கணக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டிருக்கும். அதில் உள்ள இணைப்பு வேறு ஒரு இணையத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனைப் பின்பற்றி செல்பவர்களிடம் வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை, பற்று அட்டை போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படும்.
பின்னர் மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குகின்றனர்.
வங்கியிலிருந்து வரும் மாதாந்தர அறிக்கையைப் பார்த்த பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துகொள்கின்றனர்.
நெட்ஃபிளிக்ஸ் ஒருபோதும் தனிநபர்களின் கடன் அட்டை, பற்று அட்டை, வங்கி விவரங்களைக் கேட்டு மின் அஞ்சலோ அல்லது குறுந்தகவலோ அனுப்புவதில்லை என்று காவல்துறை கூறியது.