சென்னை,ஏ. ஆர்.ரகுமானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ரகுமானும் இது குறித்து, நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் பிரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி என்று தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். இருப்பினும், சிலர் ஏ.ஆர். ரகுமான் சாய்ரா பிரிவு குறித்து வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். ‘ரகுமான்- சாய்ரா’ இருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்து தவறான தகவல்களை விஷமாகப் பரப்பினர்.
மேலும், ஏ.ஆர். ரகுமானுடைய கிட்டாரிஸ்ட் ஒருவரும் அவருடைய கணவருடனான விவாகரத்தை அறிவித்ததைத் தொடர்புப்படுத்தி விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பினர். இது குறித்து ஏ.ஆர். ரகுமானின் ரசிகர்கள் வதந்திகளைக் கடுமையாகக் கண்டித்து, அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள இசை கலைஞர் மோகினி டே, தனது தந்தை போன்ற நபருடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று அதில் மோகினி டே தெரிவித்துள்ளார்.