சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி பொறியியல் துறை மாணவி ஒருவரை இருவர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் பத்மாவதி தலைமையில், நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை மூன்று தனிப்படைகள் அமைத்து வலைவீசித் தேடியதில், 37 வயது ஞானசேகரன் என்பவனைக் கைது செய்தனர். அவன், கோட்டூர்புரம் மண்டபம் சாலையோரத்தில் பிரியாணிக் கடை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை 15 நாள்கள் (ஜனவரி 8ஆம் தேதி வரை) நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசைச் சாடியுள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்களைக் காவல்துறை அப்புறப்படுத்தியது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்குச் சரியான பாதுகாப்பு வழங்கக் கோரி, மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நீண்டகாலப் பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்ய நிர்வாகம் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் அதிகமான கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை காவல்துறை உறுதிசெய்திட வேண்டும்,” என்று அவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது. அதில், “நானும் எனது நண்பரும் தனியாக இருந்ததைக் காணொளி எடுத்துக் கல்லூரித் தலைவர், பேராசிரியரிடம் காண்பித்து டிசியைத் தர வைப்பேன் என மிரட்டினான். கைப்பேசியில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்குக் காணொளி அனுப்புவேன் என மிரட்டினான்.
“நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை; தொடர்ந்து மிரட்டினான். அடிபணியவில்லை என்றால் காணொளியைச் சமூக ஊடகங்களில் பதிவிடுவேன் எனக்கூறி, என் நண்பனை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு, என்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்தான்,” என்று கூறியதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞானசேகரனைக் கைது செய்தபோது அவன் தப்பி ஓட முயற்சி செய்தபோது கீழே விழுந்து இடது கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.