Offline
Menu
கால் சென்டர் வாசலில் கத்திக்குத்து.. ரத்த வெள்ளத்தில் பலியான பெண்- வேடிக்கை பார்த்த மக்கள்
Published on 01/11/2025 05:00
News

புனேவில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் இளைஞர் ஒருவர், நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தரையில் ரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணை மக்கள் சூழ்ந்திருக்க அந்த நபர் கத்தியால் மீண்டும் தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது.அங்கு இருந்த யாரும் கொலைகாரனை தடுக்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெண்ணை கொலை செய்தபின் இளைஞன் கத்தியை எறிந்துவிட்டு அங்கிருந்து செல்லும்போதுதான் மக்கள் முன்னேறி அவனை பிடித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் கிருஷ்ண கனோஜா (30). அவர் எர்வாடாவை தளமாகக் கொண்ட WNS குளோபலில் (வணிக செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனம்) கணக்காளராக உள்ளார்.தனது சக ஊழியரான சுபதா கோதாரே (28) தன்னிடம் பலமுறை கடன் வாங்கியதாக அவர் கூறினார். தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.

பணத்தைத் திருப்பித் தருமாறு சுபதாவிடம் கேட்டபோது, தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தைத் திருப்பித் தர மறுத்தார். இதையடுத்து கனோஜா பெண்ணின் கிராமத்திற்கு சென்று உண்மையை கண்டுபிடித்தார்.அவரது தந்தை பூரண நலமுடன் இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் அறிந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், கனோஜா, சுபதாவை அவரது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துள்ளார். சுபதா பணத்தைத் திருப்பித் தர மீண்டும் மறுக்கவே, இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் கோபமடைந்த கனோஜா அவரை சமையலறைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கனோஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Comments