பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் – கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள்.இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.
கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்நிலையில், குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் மாடி படிக்கட்டுகளில் இருந்து குற்றவாளி கீழே இறங்கி வருகிறார். அவனுக்கு கிட்டத்தட்ட 35 வயது இருக்கும் போலீஸார் தெரிவித்தனர்.