கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த ஒரு சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து காலை 11.05 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
அங்கு சென்றதும், 60 வயதான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று நம்பப்படும் ஒரு கத்தியையும், விசாரணைக்கான பிற சான்றுப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் சொன்னார்.
மேலும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்டவரின் 59 வயது மனைவி கைது செய்யப்பட்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாஸ்ரோன் கூறினார்.
பாதிக்கப்பட்டவரது சடலம் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது, அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் பல கத்திக் குத்துக் காயங்கள் என்பதும் தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.