Offline
ஒரே நாளில் 6 கின்னஸ் உலக சாதனை… 14 வயது மாணவர் அசத்தல்
News
Published on 02/22/2025

புனே,மராட்டியத்தில் வசித்து வரும் ஆரியன் சுக்லா (வயது 14) என்ற மாணவர் ஒரே நாளில் 6 உலக சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு, கூடியிருந்த திரளான கூட்டத்தினரின் முன் 50, 5 இலக்க எண்களை மனதளவில் விரைவாக கூட்டி விடையை கூறி முதன்முறையாக சாதனை படைத்திருக்கிறார்.

இந்த முறை எப்போதும் முயற்சிக்கப்படாத உலக சாதனைகளை படைப்பதற்காக சமீபத்தில் துபாய்க்கு சென்றார். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ஒரே நாளில் 6 உலக சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

அவர், மனதளவில் விரைவாக 100, 4 இலக்க எண்களை கூட்டியும் (30.9 வினாடிகள்), 200 4 இலக்க எண்களை கூட்டியும் (1 நிமிடம் 9.68 வினாடிகள்), 50, 5 இலக்க எண்களை கூட்டியும் (18.71 வினாடிகள்), 10 செட்டுகள் கொண்ட 20 இலக்க எண்களை, 10 இலக்க எண்களால் வகுத்தும் (5 நி 42 வினாடிகள்), 10 செட்டுகள் கொண்ட 2, 5 இலக்க எண்களை பெருக்கியும் (51.69 வினாடிகள்) மற்றும் 10 செட்டுகள் கொண்ட 2, 8 இலக்க எண்களை பெருக்கியும் (2 நி 35.41 வினாடிகள்) சாதனை படைத்திருக்கிறார்.

அவருடைய இந்த வெற்றிக்கு காரணங்களாக அவர் கூறும்போது, போட்டிகளுக்கு தயாராக தினமும் பயிற்சி மேற்கொள்வது என்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அதனால், நாள்தோறும் 5 முதல் 6 மணி நேரம் வரை நான் பயிற்சி மேற்கொள்கிறேன் என்றார். சகஜ யோகா செய்வது, எனக்கு அமைதியாக இருப்பதற்கும், கவனத்துடன் செயல்படுவதற்கும் உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

6 வயது முதல் மனதளவில் கணக்கு போடுவதற்கு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆரியன், 2022-ம் ஆண்டு 12 வயதில், ஜெர்மனியில் நடந்த மனதளவில் கணக்கீடு உலக கோப்பைக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். கடந்த காலங்களில் பல சர்வதேச பட்டங்களை வென்று, மனதளவிலான கணக்கீட்டில் பல்வேறு உலக சாதனைகளை படைத்திருக்கிறார்.

Comments