Offline
இலங்கையில் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 6 யானைகள் பலி
News
Published on 02/24/2025

கொழும்பு,கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் மத்திய இலங்கையின் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே யானைகள் கூட்டத்தின் மீது ரெயில் ஒன்று மோதியதால் 6 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

முன்னதாக இலங்கையின் மின்னேரிய-கல்லோயா வழித்தடத்தில் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹபரானா நகரில் உள்ள வன விலங்கு சரணாலயம் அருகே ரெயில் சென்றபோது அந்த தண்டவாளத்தை சில யானைகள் கடக்க முயன்றன. அப்போது யானைகள் மீது ரெயில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. படுகாயம் அடைந்த யானைகளை வனத்துறையினா் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் யானைகள் மோதியதில் அந்த ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது நாடு கண்ட மிக மோசமான வனவிலங்கு விபத்து என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை துணை மந்திரி ஆண்டன் ஜெயக்கொடி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தண்டவாளம் அருகே யானைகள் செல்வதை தடுக்க மின் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Comments