கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசியதற்காக சமூகசேவை செய்ய வேண்டும் உத்தரவிடப்படும் குற்றவாளிகள் புல் வெட்டும் வேலையையும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையையும் கழிப்பறையை சுத்தம செய்யும் பணியையும் 12 மணி நேரம் செய்ய வேண்டும். இதற்காக இவர்கள் சிறப்பு சீருடையும் அணிய வேண்டும். மலேசியா எப்போதும் தூய்மையாக இருப்பதற்கு சமுதாயத்தின் மனப்போக்கை மாற்ற இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙகா கோர் மிங் தெரிவித்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக கிழக்கை நோக்கும் கொள்கையை நாம் கொண்டிருக்கிறோம்.
ஆகவே இந்த சட்டவிதிமுறையை அறிமுகம் செய்ய பொருத்தமான நேரம் இப்போது வந்து விட்டது. கார் கதவு கண்ணாடியை திறந்து அப்படியே குப்பைகளை வீசக்கூடாது அல்லது குப்பைத் தொட்டி இருக்கின்ற போதும் குப்பைகளை சாக்கடைக்குள் போடக்கூடாது. இப்படி செய்வோரின் செயலை ஜீரணித்து கொள்ள முடியாது. குறிப்பாக தூய்மை தொடர்பான விஷயத்தில் சகித்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் ஈப்போவில் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
2007ஆம் ஆண்டு பொது சுகாதார கழிவுகள் மேலாண்மை சட்டத்திருத்தம், 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் கட்டட சட்டம் மூலமாக இந்த உத்தரவை அமல்படுத்த ஊராட்சித்துறை அமைச்சு உத்தேசித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சமுதாய சேவை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறுவோருக்கு 2,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் மக்களவையில் மேலவையில் நிறைவேற்றப்பட்ட பின் இந்தாண்டுக்குள் சட்டம் அமலுக்கு வரும்.
மலேசியாவில் படிக்காதவர்கள் என யாரும் இல்லை. எல்லாரும் 12 ஆண்டுகள் பள்ளிகூடம் செல்கிறார்கள். அதனால் குப்பைத் தொட்டியில்தான் குப்பைகளை போட வேண்டும் என்பது தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.