மலேசியர்களிடையே கடுமையானதாக இருக்கும் சிறுநீரக பாதிப்புள்ள நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை யளிப்பதாக உள்ளது என்று சுகாதாரத்துறை (மருத்துவம்) துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் அஸிமி யூனுஸ் நேற்று தெரிவித்தார். மோசமான நிலையில் உள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் இலக்கை அடைவதில் எத்தரப்பினருடனும் ஒத்துழைப்பதில் திறந்த மனப்போக்கைக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் அரசு சாரா அமைப்புகள், தனியார் துறை. அரசாங்க ஏஜென்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் சுகாதார அமைச்சு வரவேற்கிறது என்று அவர் தெரிவித்தார். மிக கடுமையான சிறுநீரக கோளாறு உள்ள நோய்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை எங்கள் தரவுகள் காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் டயலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்ய வேண்டிய சிறுநீரக
நோயாளிகள் எண்ணிக்கை 50,000 ஆக இருந்தது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30,000க்கும் அதிகமான சிறுநீராக நோயாளிகள் டயலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். 2040ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
ஷாஆலமில் நேற்று தேசிய அளவிலான உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆரோக்கியமான வாழ்க்கை மீதான கலந்துரையாடலில் அவர் பேசினார். இதற்கிடையே சிறுநீராக நோய் பாதிப்பைத் தவிர்க்கவும் அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் வியூகங்களைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று மலேசிய தேசிய சிறுநீரக அறக்கட்டளை உதவித்தலைவர் டாக்டர் டி திருவேந்திரன் தெரிவித்தார்.