சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.
வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் சென்ட்ரலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், “அணியில் நிறைய நடந்து விட்டது, நாம் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக வொயிட் பால் கிரிக்கெட்டில் தோற்று வருகிறோம். எல்லா அணிகளுடனும் தோற்கிறோம். தற்போது துணிச்சலான முயற்சிகள் தேவைப்படுகின்றன. தைரியமான இளம் வீரர்கள் நமக்கு தேவை.
ஐந்து முதல் ஆறு மாற்றங்கள் அணியில் செய்யப்பட வேண்டும். 2026 T20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட வேண்டும். அவர்களுக்கு நிறைய நேரம் கொடுத்து விட்டோம். அவர்களை நட்சத்திர வீரர்களாக்கினோம். ஆனால் இனி அது நடக்கப்போவதில்லை” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அக்ரம்,”தற்போது என்ன நடக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? தேர்வுக்குழு , கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அழைக்கப்பட வேண்டும். எதன் அடிப்படையில் யாருக்கு விளையாட வாய்ப்பளித்தார்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும். குஷ்தில் ஷா மற்றும் சல்மான் ஆகா ஆகியோரைப் பார்க்கும் போது, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை அவர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என தோன்றுகிறதா? ” என கேள்வி எழுப்பினார்.
“தற்போது ஆடும் 11 பேர் கொண்ட அணி சரியில்லை என நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மாற்றம் செய்ய விரும்பினால், செய்கிறோம் என கிரிக்கெட் வாரிய தலைவர் கூறுகிறார் . ஆனால் அதே 11 வீரர்களுடன் மீண்டும் அணி காலமிறங்குகின்றது. இதில் கேப்டனுக்கும் பங்கிருக்கிறது. ஏனென்றால், அவர்தான் அணியின் தலைவர். எந்த வீரருடன் விளையாடினால் போட்டியை வெல்ல முடியும் என்பது கேப்டனுக்கு தெரியாவிட்டால், அது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாகிஸ்தான் ரசிகர்கள் 20 ஓவர் முடிந்த உடனேயே துபை மைதானத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இது முன்னெப்போதும் நிகழாத ஒன்று” என வாசிம் அக்ரம் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்தார்.
“பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் ஒழுக்கம் இல்லை. பேட்டிங்கிலும் இதே நிலைமைதான். பாபர் நன்றாகத் தோன்றுகிறார். ஆனால் அவரால் அவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ரிஸ்வான் வந்த உடனேயே பவுண்டரி அடித்தார், ஆனால் இதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது” என யூனுஸ் கூறினார்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் போது, “தனித்துவமான எதுவும் நடந்துவிடவில்லை. இந்த நிலைமைக்கு நாம் தற்போது பழகிக் கொண்டோம். இது வீரர்களின் நோக்கத்தைப் பற்றியதல்ல. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு திறமையே இல்லை. திறமை இருந்ததால் இப்படி விளையாட மாட்டார்கள். புத்தியை பயன்படுத்தாமல் கேப்டன்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. தற்போது இது பற்றிய பேசுவதற்கும் எனக்கு விருப்பமில்லை” என கூறினார்.