Offline
காதலி உள்பட 5 பேரை சுத்தியலால் அடித்துக்கொன்ற இளைஞர்; கேரளாவில் பயங்கரம்
News
Published on 02/26/2025

திருவனந்தரபுரம்,கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (வயது 23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவர் கூறிய இடங்களுக்கு விரைந்து சென்றனர். அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். படுகாயங்களுடன் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணை மீட்ட போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பேருமலை பகுதியை சேர்ந்தவர் ரஹிம். இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபான் (வயது 23), இளைய மகன் அப்சான் (வயது 13). ரஹிம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிற்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். ஆனால், கொரோனாவுக்குபின் அபான் கேரளா திரும்பிவிட்டார். ரஹிம் மட்டும் அரபு நாட்டில் தொழில் செய்து வந்தார்.

அபானின் பாட்டி சல்மாபீவி (வயது 88). இவர் பாங்கோட்டில் வசித்து வந்தார். அதேபோல், அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதா. இவர்கள் இருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா. இவர் கல்லூரி படித்து வந்தார்.

இதனிடையே, அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனால் குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தொழில் தொடங்கவும் அபான் தனது பாட்டி சல்மாபீவி, சித்தப்பா லத்தீப் இடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததற்கும் அபானின் தாயார் உள்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Comments