Offline
மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்
News
Published on 02/26/2025

சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது மிகவும் முக்கியமானது. அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையானது, மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களை நமது ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

முதல் ஜாமம்

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

இரண்டாம் ஜாமம்

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது. இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூன்றாம் ஜாமம்

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார்.

மஹா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

நான்காம் ஜாமம்

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.

மஹா சிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

* ‘சிவாயநம’ என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

* ‘மஹா’ என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.

* ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

• ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

* கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.

* சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு ‘கவுரிசங்கரமண மஹாசிவராத்திரி’ என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

* சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

* சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.

* சிவராத்திரி தினத்தன்று

1. ஸ்ரீ பவாய நம,

2. ஸ்ரீ சர்வாய நம,

3. ஸ்ரீ பசுபதயே நம,

4. ஸ்ரீ ருத்ராய நம,

5. ஸ்ரீ உக்ராய நம,

6. ஸ்ரீ மஹாதேவாய நம,

7. ஸ்ரீ பீமாய நம,

8. ஸ்ரீ ஈசாராய நம

என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

Comments