Offline
பேங்க் ராக்யாட் BRIEF-iகான உதவித் தொகை 100 மில்லியனாக உயர்வு; ரமணன்
News
Published on 02/26/2025

பேங்க் ராக்யாட் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கடனுதவித் திட்டத்திற்கு (BRIEF-i)   எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதால், கூடுதலாக  50 மில்லியன் ரிங்கிட்  நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்திற்கான மொத்த நிதி 100 மில்லியனாக உயர்ந்துள்ளது என தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த முயற்சி பேங்க் ராக்யாட் வங்கி  மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சு (KUSKOP) சார்பில் இந்திய சமூகத்திலுள்ள தொழில் முனைவோர்களுக்கு நிலையான ஆதரவளிக்கும் ஒரு முக்கியமான அம்சமாகும்  என்று இங்குள்ள பேங்க் ராக்யாட் வங்கியின் தலைமையகத்தில் 25 ஆம் தேதியான நேற்று  BRIEF-i மாதிரி காசோலைகளை எடுத்து வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும், இந்த கூடுதல் நிதியுதவி, தொழில்முனைவோர்களுக்கு தேவையான நிதி ஆதரவை வழங்கி, அவர்களின் தொழில்களை வளர்த்து, புதிய தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேங்க் ராக்யாட் வங்கியின்  தலைவர் டத்தோ முஹம்மட் இர்வான் முஹம்மட் முபாரக் பேசுகையில்,  BRIEF-i திட்டம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (PMKS) வளர்ச்சியில் உறுதுணையாக செயல்படுவதைக் காணும் போது, இந்த கூடுதல் நிதியுதவி சிறப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது என்றார். மேலும், இந்த நடவடிக்கை, தொழில்முனைவோர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்  எனவும் கூறினார்.

2024 ஜூன் மாதம் அறிமுகமான BRIEF-i  திட்டத்தின் கீழ் 2025 பிப்ரவரி 21 வரை 512 தொழில்முனைவோர்களுக்கு மொத்தம் 49 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து, சேவைகள், சில்லறை வர்த்தகம், உணவு மற்றும் பானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் செயல்படும் இந்திய தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர்.

Comments