Offline
உத்தரகாண்ட் பனிச்சரிவு: 49 பேர் உயிருடன் மீட்பு- ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மாயம்
Published on 03/02/2025 14:35
News

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமம் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய-திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த மலை கிராமத்தில் எப்போதும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் அங்குள்ள சாலைகளில் பனித்துனிகள் குவிவது வழக்கம்.

திபெத் எல்லையை நோக்கி ராணுவம் நகர்வதற்கான முக்கிய பாதை என்பதால் சாலைகளில் குவியும் பனியை அகற்றுவதற்காக எல்லை சாலைகள் அமைப்பை (பிஆர்ஓ) சேர்ந்த தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே முகாம்களை அமைத்து தங்கி, பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. இதில் முகாமில் இருந்த 57 தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முதலில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறையில் சிறிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.

இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக பனிச்சரிவில் சிக்கிய 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மனா கிராமத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Comments