Offline
டிரம்ப் நன்றி கெட்டவர்- எலான் மஸ்க்
By Administrator
Published on 06/08/2025 08:00
News

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், உலக பணக்காரரான எலான் மஸ்க்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எலான் மஸ்க் பக்க பலமாக இருந்தார். நிதி உதவி தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு அவர் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார்.

ஜனவரி மாதம் டிரம்ப் பொறுப்பேற்றதும் அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறையை உருவாக்கினார். இதன் தலைவராக எலான் மஸ்க்கை அவர் நியமித்தார். இந்த பதவியை ஏற்றதும் அரசின் செலவீனங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் டிரம்ப் அரசு சார்பில் அமெரிக்காவில் புதிய மிகப்பெரிய வரி குறைப்பு மற்றும் மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா செலவை அதிகரிக்கும் என்றும், இது முட்டாள் தனமானது என்றும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் அரசு நிர்வாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக டிரம்ப் கூறும் போது, எலான் மஸ்க் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நான் அவருக்கு நிறைய உதவிகளை செய்து உள்ளேன், அவரால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

இந்த மசோதாவின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். அவரை விட வேறு யாருக்கும் எதுவும் தெரியாது. அவர் பதவியில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் திடீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்குமா? என தெரியவில்லை என தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

மேலும் எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் நமது பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தற்போது முட்டல் மோதல் அதிகரித்து உள்ளது.

டிரம்பின் கருத்துக்கு பதில் அளித்த எலான் மஸ்க் நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார். அவருக்கு நன்றி உணர்வு இல்லை. நன்றி கெட்டவர். எனது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால் டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் என்று கூறி உள்ளார்.

Comments