நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பைக் காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டிருந்தன. “ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்” என்று கூறி IDF இந்த வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அந்த வரைபடத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகவும், வடகிழக்கு இந்தியா நேபாளத்தின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்தியப் பயனர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததையடுத்து, IDF வெளியிட்ட விளக்கத்தில், “இந்த வரைபடம் பிராந்தியத்தின் ஒரு விளக்கப் படம். இது எல்லைகளைத் துல்லியமாக சித்தரிக்கத் தவறிவிட்டது. இந்த படத்தால் ஏற்பட்ட எந்தத் தவறுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டது. இந்த வரைபடத்தில் ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன எனக் காட்டப்பட்டிருந்தது.