Offline
Menu
அகதிகளாக இருந்த 7,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர்
By Administrator
Published on 06/27/2025 09:00
News

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட ஆப்கான் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அகதிகளாக வசித்தவர்களில், ஒரே நாளில் சுமார் 1,685 குடும்பங்களைச் சேர்ந்த 7,474 ஆப்கான் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று (ஜூன் 25) தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடு திரும்பிய ஆப்கான் மக்கள் அனைவரும் தொர்காம் எல்லை, ஸ்பின் பொல்தாக், இஸ்லாம் காலா மற்றும் புல்-இ-அப்ரெஷாம் ஆகிய எல்லைகள் வழியாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களுக்குள் குடியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம் காலா எல்லை வழியாக மட்டும் நாளொன்றுக்கு சுமார் 8,000 முதல் 10,000 ஆப்கான் மக்கள் தாயகம் வந்தடைவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாடு திரும்பும் மக்களுக்கு, தற்காலிக கூடாரங்கள், உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றை அந்நாட்டு அரசு வழங்கி வருகின்றது. முன்னதாக, பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளில் மட்டும் சுமார் 70 லட்சம் ஆப்கான் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தங்களது நாட்டிலிருந்து வெளியேறுமாறு இருநாட்டு அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.

மேலும், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள குடிமக்கள் தாயகம் திரும்புமாறு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments