ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.