மூத்த குடிமக்கள் (Senior Citizens) தொடர்பான சட்ட வரைவு தயார் நிலையில் உள்ளதாகவும், ஆனால் சட்டம் நாடாளுமன்றத்தில் 2026ல் மட்டுமே தாக்கல் செய்யப்படலாம் என்பதாகவும் பெண்கள், குடும்ப மற்றும் சமூக வளர்ச்சி அமைச்சர் டத்தோஸ்ரீ நென்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
“வரைவு தயாராக உள்ளது. தற்போது நாம் மீண்டும் தொழில் துறையினர் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். சபா, சரவாக் உட்பட அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசிக்கின்றோம்,” என்றார்.
அவர் இன்று நடைபெற்ற ‘ஆசியா-தென் கொரியா மூத்தோர் பராமரிப்பு மாநாட்டில்’ பேசியபோது, 2025 இறுதிக்குள் சட்ட வரைவை சட்டதுறை தலைவர் (AGC) அலுவலகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், தாமதம் ஏற்படுமானால் 2026ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறினார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், மூத்தோர் பராமரிப்பு துறையை ஒழுங்குபடுத்தி, வயோதிபர்கள் தகுந்த கவனமும் மரியாதையும் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
2025-ம் ஆண்டுக்குள் சட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையிலும், நாடு 2030-ம் ஆண்டு முதியோர் நாடாக மாறும் நிலையில், இது ஒரு அவசியமான முயற்சி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.