வேப்பிங் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தடுக்க தேசிய அளவில் உடனடி தடை விதிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் தாமதம், இளைய தலைமுறையை ஆபத்துக்கு உள்ளாக்கும் என்று கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் கண்டனம் தெரிவித்தார். வேப்பிங் திரவங்களில் நிக்கோடின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கலந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இவை பள்ளி மாணவர்களையே பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்றும் எச்சரித்தார். 2017ல் 2.1 லட்சம் மாணவர்கள் பயன்படுத்திய நிலையில், 2022ல் இது 3 லட்சமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, 2030க்குள் இது மூன்று மடங்கு ஆகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசுகள் உடனடியாக முழுமையான தடை அறிவிக்க தவறினால், அதன் தாக்கம் மக்களின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும் என அவர் வலியுறுத்தினார்.