சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள தியான்ஷுய் நகரில் அமைந்த ஹெஷி பெய்க்சின் என்ற தனியார் பள்ளியில் உணவுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கேக் மற்றும் கார்ன் ரோல்லில் அதிக அளவிலான 'காரீயம்' உலோகம் கண்டறியப்பட்டுள்ளது. உணவு வண்ணமயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் சமையல் பணியாளரால் இச்செயல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், 251 மாணவர்களில் 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் 201 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரத்தத்தில் காரீயம் கலந்திருப்பதால், இது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக இது நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.பள்ளியில் சேர்க்கை மற்றும் வருவாயை அதிகரிக்க வண்ணமய உணவுகள் வழங்க பள்ளி நிர்வாகம் தீர்மானித்தது என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2008-ல் சீனாவில் பால் பவுடர் விஷவாதம் ஏற்பட்டதை நினைவுபடுத்தும் இச்சம்பவம், மேலும் ஒரு பொதுசுகாதார அதிர்ச்சியாக அமைந்துள்ளது.