டாக்கா,வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது.
தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இடைக்கால அரசு நடந்து வருகிறது. அந்நாட்டில் சிறுபான்மையோருக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த சூழலில், லால் சந்த் என்ற சோஹாக் என்பவர் பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மிட்போர்டு மருத்துவமனை அருகே கும்பல் ஒன்று வழிமறித்து கடுமையாக தாக்கியது. கான்கிரீட் கற்களால் அவரை தாக்கியுள்ளது.
இதில், கீழே சரிந்த அவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய அந்த கும்பல், அதன்பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் என உறுதி செய்ததும், உடல் மீது நடனம் ஆடி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. தொழில் போட்டியால் இந்த படுகொலை நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆளும் இடைக்கால அரசுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி உள்துறை ஆலோசகர் ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி கூறும்போது, தேர்தலுக்கு முன் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
எனினும், இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனம் வாய்ந்தது. உண்மையில் சோகம் ஏற்படுத்த கூடியது. நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை என கூறினார். இந்த வழக்கில் நேற்றிரவு 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்த கைது எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.