காசா முனை,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. இந்நிலையில், 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்குகும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்க சென்றவர்கள் என்ற சோக தகவல் வெளியாகி உள்ளது. 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் பிடிப்பதற்காக குறிப்பிட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சிறுவர்கள். 14 பேர் பெரியவர்கள் ஆவர்.
இந்நிலையில், இஸ்ரேல் தரப்பில் இருந்து திடீரென தாக்குதல் நடந்ததும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். இதில், பலியானவர்களில் 6 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க ஆதரவுடனான போர்நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் சூழலில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.