நிபோங் தெபால்,
அண்மையில் வேலைக்குச் செல்கின்ற பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல்களை குறிவைக்கும் eHATI என்ற திருமண motivational programme குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், ஆசிரியர்களும் அவ்வாறு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடிக் அறிவுறுத்தினார்.
இன்று, நிபோங் தெபாலில் உள்ள ஒரு பள்ளிக்கு விஜயம் செய்த பிறகு அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். “இந்த வகை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களின் ஒழுங்கையும் கல்வி தரத்தையும் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடும். அதனால், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம் என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
அத்துடன், ஆசிரியர்கள் தேவையான உள வளங்களைப் பெற கல்வி அமைச்சரிடம் அணுக வேண்டும் என்றும், தாங்கள் தெளிவாக அறியாத நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என கூறினார். “பள்ளி மட்டத்தில் உள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சகம் பல்வேறு உள வளர்ச்சி மற்றும் ஆலோசனைத் திட்டங்களை வழங்கிவருகிறது. மேலும், சில நிகழ்ச்சிகள் ஆசிரியர்களின் மரியாதைக்கே கேள்விக்குறி எழுப்பக்கூடியதாக இருப்பதால், இவ்வாறான செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.