பொதுப்பணித்துறை (JKR) ஊழியர்கள் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன் நேர்த்தியான மற்றும் தொழில்முறை பண்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று பணியாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
பேராக் மாநிலத்தில் உள்ள கெரிக் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் அண்மையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததை மேற்கோள் காட்டி, “விபத்தின் பல காரணங்கள் உள்ளன, ஆனால் JKR மீது தவறான பார்வை செலுத்தப்படுகிறது” என்றார். பாதையில் பாதுகாப்பு கம்பி இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக சிலர் கூறினாலும், உண்மையில் மிக வேகமாக சென்ற பேருந்தே தடுப்பு கம்பியை மோதி கவிழ்ந்ததாக அவர் விளக்கினார்.
இன்று நடைபெற்ற ஜே.கே.ஆர் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் (SOC 2025) பேசிய அவர், தரமான பணிச்சேவையை தொடர்ந்து வழங்குவதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதுதான் முக்கியம் என்றார்.
இந்த மாநாட்டில், நாடு முழுவதிலிருந்தும் 400-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்று, சேவைகளை மேம்படுத்த புதிய யோசனைகள் குறித்து ஆலோசிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.