ஜெர்த்தே
பலகாரம் வாங்குவது போல் நடித்து கொள்ளையிட முயன்ற ஆடவனைத் தடுக்கும் முயற்சியின் போது பெண் வர்த்தகர் ஒருவர் இரு கைகளிலும் காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் இங்கு அருகிலுள்ள கம்போங் கோங் மேடாங், ஜாலான் தெம்பிலாவில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்தது.
முப்பத்தோரு வயதான அந்த பெண் வர்த்தகர் சந்தேக நபர் ஆர்டர் செய்த உறைய வைக்கப்பட்ட பலகாரங்களை விநியோகிப்பதற்காக அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தாக பெசுட் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது சானி முகமது சாலே கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த பெண் வர்த்தகரின் காரை அணுகிய சந்தேக நபர், கத்தியைக் காட்டி அவரது கார் சாவியை எடுக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட அந்த வர்த்தகர் தனது கைகளால் சந்தேக நபரைத் தடுக்க முயன்றார். இதனால் அவரது வலது மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.