Offline
கணவரை ஆலோசகராக நியமித்த வழக்கில் முன்னாள் இயக்குநருக்கு குற்றச்சாட்டு.
By Administrator
Published on 08/01/2025 09:00
News

கோலாலம்பூர், 

தனது நிறுவனத்தில் கணவரை ஒப்புதல் இல்லாமல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்ததற்காக பதவியை தவறாக பயன்படுத்தியதாக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஃபரா சப்ரினா நசாருடின் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) குற்றம் சாட்டப்பட்டது.

46 வயதான ஃபரா சப்ரினா, நீதிபதி ஹமிதா முகமது டெரிலின் முன்னிலையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, முறையான விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிக்கையின் விவரப்படி, ஃபரா சப்ரினா தனது கணவர் டேனியல் பிரடெரிக் வால்லை AsiaPac எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்க நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமலேயே தனது நிர்வாக இயக்குநர் பதவியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், தனது சொந்த நலன் மற்றும் கணவரின் நலனுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் RM786,209.30 தொகையை மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்ததாகவும் குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவங்கள் 2021 ஜனவரி 27 முதல் 2023 ஜூலை 28 வரையிலான காலப்பகுதியில், பிரிக்‌ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் சென்ட்ரலில் அமைந்துள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு, 2016ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் பிரிவு 218(1)(d) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவு 218(2) கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM3 மில்லியன் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

நீதிபதி ஹமிதா, ஒரு நபரின் உத்தரவாதத்தில் ஃபரா சப்ரினாவுக்கு RM20,000 ஜாமீன் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments