மலேசிய ஏற்றுமதிகளுக்கான அமெரிக்க வரி குறைப்பு – ‘வரவேற்கத்தக்க நடவடிக்கை’ !- பினாங்கு முதல்வர் பாராட்டு
ஜார்ஜ் டவுன்,
மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 25% லிருந்து 19% ஆக குறைக்கப்பட்டதை “சமயோசிதமான மற்றும் வரவேற்கத்தக்க தீர்மானம்” என பினாங்கு முதல்வர் Chow Kon Yeow குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி குறைப்பு, குறிப்பாக பினாங்கின் முக்கியமான துறைகள், மின், மின்னணு, உற்பத்தி மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என அவர் தெரிவித்தார்.
பினாங்கு, “கிழக்கின் சிலிகோன் பள்ளத்தாக்கு” (“Silicon Valley of the East”)என அழைக்கப்படுவதால், உலகின் முக்கிய உற்பத்திகளில் பெரும் பங்காற்றும் மாநிலமாக உள்ளது.
எனினும், இது ஒரு பகுதி குறைப்பு மட்டுமே என்றும், பிற நாடுகள் ஒப்பந்தங்கள் மூலமாக இன்னும் குறைவான அல்லது பூஜ்ய வரி வீதங்களை அனுபவித்து வருவதால், மலேசியா இன்னும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பதில் எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பினாங்கின் பொருளாதார வலிமை உள்ள துறைகளில் வரி சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“சர்வதேச சந்தையில் போட்டி நிலையாக இருக்கவும், உயர்மதிப்புடைய முதலீடுகளை ஈர்க்கவும் இது முக்கியமானது” எனவும் அவர் தெரிவித்தார்.