பெட்டாலிங் ஜெயா,
கோத்த கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில், போலி பாஸ்போர்டுடன் மலேசியாவை விட்டு வெளியேற முயன்ற 21 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய எல்லைக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமலாக்க பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் பாஸ்போர்ட் சோதனை செய்யப்பட்டது. அதில், ஜூலை 28-ஆம் தேதி நுழைந்ததாகவும், ஜூலை 30-ஆம் தேதி வெளியேறியதாகவும் சுற்றுலா விசா முத்திரைகள் இருந்தன.
ஆனாலும், அந்த நுழைவு மற்றும் வெளியேறும் பதிவு இரண்டும் மலேசிய குடிவரவு துறையின் தரவுத்தொகுப்பில் இல்லாததால், அவை போலியானவை என சந்தேகிக்கப்பட்டது.
“மலேசியாவில் தங்கியிருந்த கால அவகாசம் குறித்த தகவலை அதிகாரிகளிடமிருந்து மறைக்க அவர் முயற்சித்திருக்கலாம்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரண்டு பயணச்சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன — ஒன்று ஜூலை 30-ஆம் தேதி கோலாலம்பூருக்கான விமானத்திற்கும், மற்றொன்று அதற்குப் பிறகு மணிலா (பிலிப்பைன்ஸ்) செல்லும் விமானத்திற்கும் என தெரிவித்தனர்.
அந்த பயணச்சீட்டுகளின் நோக்கம் குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைக்காக குடிநுழைவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.