கோலாலம்பூர்,
தொழில்நுட்ப பரிமாற்றம், இணைந்த பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மாணவர்கள் மற்றும் கல்வி பணியாளர்களுக்கான பரிமாற்ற திட்டங்களை உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய இராச்சியம் (UK) தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை உயர் கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir இன்று புத்ரஜெயாவில், UK யின் பிரதிநிதி பாரோனெஸ் ஜாக்கி ஸ்மித்தை சந்தித்த பிறகு, தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
அவரது பதிவில், “இந்த இருநாட்டு சந்திப்பு, மலேசியா மற்றும் ஐக்கிய ராச்சியத்துக்கிடையில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் உள்ள ஆழ்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உரையாடலுக்கான ஒரு முக்கிய தளமாக அமைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அவரின் விளக்கத்தில், மலேசியாவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 105 சமூகக் கல்லூரிகள் உள்ளதாகவும், அவை தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சியில் (TVET) முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவித்தார்.
இத்தகைய நிறுவனங்கள், உயர் திறன் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதுடன், வேலை சார்ந்த கற்றல் (Work-Based Learning) முறைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளிலும் உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழிற்துறைகளுடன் தங்கள் தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றன என்றும் கூறினார்.
இந்த வகை அனைத்துலக கூட்டாண்மைகள், கல்வி தொடர்பான நகர்வுகளையும் புதுமை முயற்சிகளையும் ஊக்குவிக்கின்றன; மேலும், எதிர்கால வேலைத்திறன் வாய்ந்த, உலக அளவில் போட்டியாளர்களை உருவாக்கும் வழியையும் திறக்கின்றன எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்துடன், மலேசியா தென்கிழக்காசியப் பகுதிகளில் ஒரு முன்னணி உயர்கல்வி மையமாக வலுப்பெற்று வருவதை மற்ற நாடுகள் அடையாளம் காணத் தொடங்கியுள்ளன என்றார்.