ஜித்ரா,
கெடா மாநில போலீசார், புக்கிட் காயு ஹித்தாம் பகுதியில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கையின்போது , சுமார் 93.77 கிலோ கஞ்சா (RM290,600 மதிப்பில்) கடத்திய முயற்சியை முறியடித்து, நால்வரை கைது செய்துள்ளனர்.
முதல் தேடுதல் வேட்டை ஜூலை 30 அன்று புக்கிட் காயு ஹித்தாம் பகுதியிலும் நடைபெற்றது. அங்கு, 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மூன்று கருப்பு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 57,352.85 கிராம் எடையுள்ள 55 கஞ்சா பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்த நாள் (ஜூலை 31) நடைபெற்ற இரண்டாவது தேடுதலின்போது , அதே பகுதியில் அருகிலுள்ள இடத்தில் 36,414 கிராம் எடையுள்ள 35 கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை.
அதே நாள் இரவு 9 மணியளவில், பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சாங்லுன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே கார் ஒன்றில் இருந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஆகஸ்ட் 2) மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட நான்காவது தேடுதலில் , புக்கிட் காயு ஹித்தாம் குடியேற்றம், சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் 24 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்கள் சுமார் 1,87,000 பேர் பயன்படக்கூடிய அளவில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கில் மூன்று பேர் மெத்தாம்பேட்டமின் பயன்படுத்தியிருப்பதும், அவர்களுக்கு முந்தைய போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும், 1952ஆம் ஆண்டு மோசடி போதைப்பொருள் சட்டத்தின் 39B மற்றும் பிரிவு 15(1)(A)ன் கீழ் விசாரணைக்கு 4 முதல் 6 நாட்கள் வரை ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.