ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் ஒடிசா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகிலுள்ள ரெயில் பாதை ஒன்றில் கண்ணி வெடி வெடித்து ரெயில்வே ஊழியர் பலியானார். குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் மாவோயிஸ்டு சுவரொட்டிகள் காணப்பட்டதால், குண்டுவெடிப்பில் மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரம்படா மற்றும் ரெஞ்ச்டாவை இணைக்கும் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் தண்டவாளத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது. இது ஒரு லூப் லைன் என்பதால் எந்த பயணிகள் ரெயிலின் இயக்கமும் பாதிக்கப்படவில்லை என ரெயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குண்டுவெடிப்பில் ரெயில்வே பணியாளர் உயிரிழந்ததற்கு ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.