கோலாலம்பூர்:
மலேசியாவின் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாட்டின் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் உள்ள 123 இடங்களில் 635 தானியங்கி நுழைவுக் கதவுகள் (Autogates) நிறுவப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்தார்.
அந்த அமைப்புகள் முகம், கண் புருவம், விரலடையாளம் உள்ளிட்ட உயர் தர பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதுடன், அதிகாரிகளின் நேரடி தொடர்பை குறைத்து பயணிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முறையில் இவை செயல்படும்.
இந்த திட்டம் 2025 டிசம்பரில் பின்வரும் முக்கிய இடங்களில் ஆரம்பிக்கப்படுகிறது:
- பங்குனன் சுல்தான் இஸ்கந்தர் (BSI)
- சுல்தான் அபூ பக்கர் வளாகம்
- கோலாலம்பூர் விமான நிலையம் (KLIA 1 மற்றும் 2)
- கூச்சிங், கோத்தா கினாபாலு, பினாங்கு விமான நிலையங்கள்
மேலும் இந்த திட்டம் 2028 மார்ச் மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது “பயண ஆவணங்களின் மோசடி, குறிப்பாக ‘flying passport’ மோசடி வழக்குகள் மற்றும் அதிகாரிகளால் நிலை நிர்ணயம் செய்யப்படும் ‘அனைத்துலக பயணிகளை திருப்பி அனுப்பும்’ (Fly and U-turn) மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டம் முக்கியமாக செயல்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் (PH) பெட்டாலிங் ஜெயா உறுப்பினர் லீ சியான் சுங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.