Offline
ரவாங் காட்டுத் தீ இரண்டு இடங்களிலும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது
By Administrator
Published on 08/05/2025 09:00
News

கோலாலம்பூர்,

ரவாங் வட்டாரத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ நேற்று மாலை முழுமையாக அணைக்கப்பட்டது.

செல்லாப் சுங்கை புவாயாவில் 60 ஹெக்டர் பரப்பளவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீ, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்ததற்கு படி, நேற்று மாலை 4.26 மணிக்கு வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

மேலும், பண்டார் கமுடா கார்டனில் 53 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட இரண்டாவது காட்டுத் தீ சம்பவமும் நேற்று மாலை 4.28 மணிக்கு அணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புக்கிட் செந்தோசா, ரவாங் மற்றும் பத்து ஆராங் தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் மொத்தம் 12 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், மூன்று வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரு இடங்களிலும் தீ அணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கும் போது எந்தவிதமான காயங்களோ விபத்துகளோ நிகழ்ந்திருக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.

Comments