செர்டாங்,
மதிப்பீட்டு வரியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியைச் சேர்ந்த 773 உரிமையாளர்களுக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (MBSJ) 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகளை இலவசமாக வழங்கியது.
இந்த நடவடிக்கை, வரிசை வீடுகளில் குப்பைகளை திறம்பட அகற்றவும், தங்களது பங்களிப்பை நேரத்தில் செய்த சொத்து உரிமையாளர்களை பாராட்டவும் மேற்கொள்ளப்பட்டது என ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி உறுப்பினர் வோங் சியு கீ தெரிவித்தார்.
தரை வீடுகளுக்கான மதிப்பீட்டு வரி RM400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குப்பைத் தொட்டியின் சந்தை மதிப்பு RM100 என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற முயற்சிகள், நகர சுத்தம் மற்றும் பொது நலனை மேம்படுத்தும் என்பதுடன், வரியை செலுத்தும் எண்ணத்தை ஊக்குவிக்கும் என்றும், வருமானத் துறையின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மதிப்பீட்டு வரியை இன்னும் செலுத்தாதவர்கள், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கட்டி, இந்த சலுகையைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த இலவச தொட்டிகளை பெற விண்ணப்பம் தேவையில்லை என்றும், “முதலில் வருவோருக்கு முதலில் வழங்கப்படும்” என்ற அடிப்படையில் கையிருப்புள்ள வரை மட்டும் வழங்கப்படும் என்றும் மாநகர மன்ற உறுப்பினர் தே பூன் கியாட் தெரிவித்தார்.
தரை வீடுகளில் வசிக்கின்ற மற்றும் வரி பாக்கி இல்லாதவர்கள் இந்த சலுகைக்குத் தகுதியுடையவர்கள் எனவும் அவர் கூறினார்.