Offline
ஜோகூர் மாநிலத்தின் புதிய காவல்துறைத் தலைவராக அப்துல் ரஹ்மான் நியமனம்
By Administrator
Published on 08/05/2025 09:00
News

ஜோகூர் பாரு,

புக்கிட் அமான் நிர்வாகத் துறையின் துணை மேலாண்மை இயக்குநராக இருந்த சிபி அப்துல் ரஹ்மான் அர்ஷாட், ஜோகூர் மாநிலத்தின் புதிய காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் இன்று (ஆகஸ்ட் 4) முதல் அமலுக்கு வருகிறது.

அவர், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்ற டத்தோ எம். குமார் (வயது 56) அவர்களின் இடத்தைப் பதிலாக ஏற்கிறார். ஜோகூர் கூலாய்யை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ரஹ்மான், 58 வயதாகும் இவர், தற்போது மாநிலத்தின் பாதுகாப்புக்கான முக்கிய பொறுப்பை ஏற்கிறார்.

ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற பதவி ஒப்படைப்பு நிகழ்வில், மலேசிய போலீசின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் அஜிஸ் அப்துல் மஜித், மாவட்ட காவல்துறைத் தலைவர்கள் மற்றும் மாநில போலீஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், காவல்துறை ஆணையர் (சிபி) பதவியை அப்துல் ரஹ்மானுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

அப்துல் ரஹ்மான் மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய அப்துல் அஜிஸ், “ஜோகூரில் காவல்துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவை செய்த குமாருக்கு நன்றி. அவரின் இடத்தை ஏற்கும் அப்துல் ரஹ்மான், இந்த மாநிலத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார். அவரது திறமை புக்கிட் அமானிலேயே அனைவருக்கும் தெரிந்தது,” என தெரிவித்தார்.

1991 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி போலீசில் சேர்ந்த குமார், தனது பதவிக்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் வெளியிட்ட உரையில், “ஜோகூரில் எனது சேவைக்காலத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மாநில அரசும், போலீஸ் உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும், அமலாக்க மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.

Comments