Offline
Menu
எலும்பும் தோலுமாக பணயக் கைதி.. வீடியோ வெளியிட்டு இஸ்ரேலுக்கு ஹமாஸ் விதித்த நிபந்தனை!
By Administrator
Published on 08/06/2025 09:00
News

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணய கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டது.

இஸ்ரேல் காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வரும் நிலையில் பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

இந்நிலையில் இஸ்ரேலின் தடையினால் இஸ்ரேலிய கைதிகளும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

“பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை” என்று ஹமாஸ் கூறியுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலில் ஆளும் பிரதமர் நேதன்யாகு அரசுக்கு எதிராக போராடி வரும் அந்நாட்டு மக்களின் சீற்றத்தை இது மேலும் அதிகரித்தது.

இதையடுத்து இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வழங்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியறுத்தினார்.

செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜூலியன் லாரிசனை தொலைபேசியில் அழைத்து பணய கைதிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நேதன்யாகு கோரியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவிற்கு மனிதாபிமான உதவி வழித்தடங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவ அனுமதிப்போம் என என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

Comments