லக்னோ,உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர் கனமழையால் கங்கை, யமுனை, பெட்வா போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி சீறிப்பாய்கின்றன. மாநிலத்தை புரட்டி போட்ட கனமழையால் ஆற்றங்கரையோரம் உள்ள சிறிய கோவில்கள், வீடுகள் நீரில் மூழ்கின. வெள்ளத்தால் மாநிலத்தில் 402 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் தற்போது 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியது. மாநிலத்தில் வெள்ளம், மின்னல், பாம்பு கடி ஆகியவற்றில் 12 பேர் உயிரிழந்தனர்.