மும்பை,அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நேற்று வழக்கம் போல வந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் சில கரப்பான் பூச்சிகள் ஓடியுள்ளன. இதைக் கவனித்த இரு பயணிகள் அசவுகரியம் அடைந்ததோடு, கரப்பான் பூச்சி தென்பட்டது தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இரண்டு பயணிகளையும் வேறு இருக்கைகளில் மாறி அமர வைத்த விமானப் பணியாளர்கள், விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியதும் தூய்மைப் பணியை மேற்கொள்ளக் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், விமானம் கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியபோது, விமானம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கமான நேரத்தில் மும்பைக்கு விமானம் புறப்பட்டுள்ளது. எனினும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது