Offline
தாய்லாந்திற்கு அதிகமாக சென்ற வெளிநாட்டு பயணிகளில் இரண்டாம் நிலையில் மலேசியா: 2.66 மில்லியன் என கணிப்பு
By Administrator
Published on 08/07/2025 09:00
News

பேங்காக்:

தாய்லாந்தின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகை இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஆறு விழுக்காடு குறைந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா, விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க இவ்வாண்டு ஜூலை வரை தாய்லாந்து 19.29 மில்லியன் அனைத்துலகப் பயணிகளை வரவேற்றது.

சுற்றுலாத் துறையைக் கைப்பற்ற சீனா, ஜப்பான், வியட்னாம் ஆகிய வட்டார நாடுகள் போட்டிபோடுவதால் தாய்லாந்துக்குச் செல்வோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.

மாறாக, ஜப்பான் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 21.5 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது. ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் அது 21 விழுக்காடு அதிகம்.

தாய்லாந்தின் ஆறு மாத பயணிகள் எண்ணிக்கையை அது முந்திவிட்டது. இவ்வாண்டு ஜூன் வரை தாய்லாந்துக்குச் சென்ற மொத்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 16.69 மில்லியன்.

ஜப்பானுக்கு ஆக அதிகமாக தென்கொரியர்கள் வந்ததாக ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு குறிப்பிட்டது. தென்கொரியாவிலிருந்து 4.78 மில்லியன் சுற்றுப்பயணிகள் ஜப்பான் சென்றனர். பட்டியலில் அதற்கு அடுத்த நிலையில் சீனாவிலிருந்து 4.72 மில்லியன் பேர் ஜப்பான் சென்றனர். அது 53.5 விழுக்காடு அதிகம்.

தாய்லாந்துக்கு ஆக அதிகமாகப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் பட்டியலில் சீனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில் சீனாவிலிருந்து 2.69 மில்லியன் சுற்றுப்பயணிகள் தாய்லாந்து சென்றனர்.

இரண்டாம் நிலையில் இடம்பிடித்த மலேசியாவிலிருந்து 2.66 மில்லியன் பயணிகள் தாய்லாந்து சென்றனர் என அங்குள்ள அமைச்சு தெரிவித்தது.

Comments