உத்தரகாசி,உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தராலி என்ற மலைக்கிராமம் உள்ளது. முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் தராலி கிராமத்தில் ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று அங்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. அதாவது, அதிகன மழை கொட்டித் தீர்த்தது. வானத்தில் இருந்து அருவி கொட்டுவதைப் போல் பெய்த மழை காரணமாக கீர் கங்கா ஆற்றில் பேரழிவு தரும் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த பெரு வெள்ளம், தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்தது. மலைப்பகுதிகளில் இருந்து வந்த பெரு வெள்ளம், அங்கிருந்த கட்டிடங்களை வாரி சுருட்டியபடி ஓடியது.
திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மாயம் ஆகியுள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற கேரள குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் உத்தரகாசி செல்வதாக புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் அவர்களை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளார். ஹரித்வாரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சி வாயிலாக அவர்கள் பயணித்ததாகவும், டிராவல் ஏஜென்சியாலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரள சுற்றுலாப் பயணிகளின் கதி என்ன என்று தெரியாததால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.