ஷா ஆலம்,
கெசாஸ் நெடுஞ்சாலையில் உள்ள கெமுனிங் டோல் சாவடிக்கு அருகே, ஷா ஆலம் நோக்கிச் செல்லும் பாதையில் நேற்றிரவு 8.30 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட ஐந்து மணி நேர சாலைத் தடுப்புச் சோதனையில், வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் தொடர்பான பல குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன.
மொத்தம் 580 வாகனங்கள் சோதனைக்குள்ளாக, அதில் 252 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. இதில், வாகன ஓட்டும் உரிமம் (லைசென்ஸ்) இல்லாததாக 76 சம்பவங்கள் முக்கியமானவை என சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து திணைக்களத்தின் (JPJ) இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.
அதே நேரத்தில், காலம் கடந்த லைசென்ஸ் – 51, காப்புறுதி இல்லாதது – 49, ஜி.டி.எல். லைசென்ஸ் இல்லாதது – 8, தெளிவில்லாமல் காட்டப்பட்டது – 5, தொழில்நுட்ப குறைகள் – 10, என பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் குறிப்புப்படி, இந்த சோதனையின் போது, அதிகபட்சமாக 2 வருடமாக லைசென்ஸ் புதுப்பிக்காதவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எனவும் தெரிவித்தார்.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்று முடிந்த இந்த சோதனையில், 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 கார்கள் உட்பட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.